மருங்காபுரி அருகே மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு உதவி கலெக்டர் விசாரணை


மருங்காபுரி அருகே மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2020 8:43 AM IST (Updated: 2 May 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

மருங்காபுரி அருகே மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

துவரங்குறிச்சி, 

மருங்காபுரி அருகே மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மணல்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூரில் உள்ள ஆற்றில் வளநாடு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர்.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது, தாசில்தாரின் அனுமதியோடு தான் மணல் அள்ளுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்ட போது சரியான தகவல் இல்லை.

உதவி கலெக்டர் விசாரணை

இதனால் மக்கள் சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்காமல் முறையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விடுவோம் என்று கூறி அதே பகுதியில் இருந்தனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார், மருங்காபுரி தாசில்தார் சாந்தி, மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி (துவரங்குறிச்சி), கண்ணதாசன் (மணப்பாறை) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மக்கள் வாகனங்களை விடுவித்தனர். பின்னர் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வளநாடு போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். வருவாய் துறையினரே மணல் கடத்தலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story