கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்க வலியுறுத்தி 2-வது நாளாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி


கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்க வலியுறுத்தி 2-வது நாளாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 2 May 2020 5:32 AM GMT (Updated: 2020-05-02T11:02:15+05:30)

கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்க வலியுறுத்தி 2-வது நாளாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

பெரம்பலூர், 

கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்க வலியுறுத்தி 2-வது நாளாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

பால் வினியோகிக்க...

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கே.கே.நகர் 8-வது குறுக்கு தெருவில் வசிக்கும் 19 வயதுடைய என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள 3 கிலோ மீட்டர் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதி என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் காலை, மாலை நேரத்தில் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதிக்கு பால் உற்பத்தியாளர்கள் கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்கக்கூடாது என்றும், ஆவின் பால் பாக்கெட்டு தான் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் மாலை துறைமங்கலம் கே.கே.நகர் சாலை பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது கேனில் கொண்டு வந்த பால் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

மறியலில் ஈடுபட முயற்சி

இந்நிலையில் நேற்று காலை கேன் மூலம் பால் வினியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டது. அதனை வாங்கிய பொதுமக்கள் பால் உடனே கெட்டு போய்விடுவதாக குற்றம் சாட்டினர். மாலையில் கேனில் கொண்டு வந்து தான் பால் வினியோகிக்க வேண்டும் என்று நகராட்சிக்கு வலியுறுத்தினர்.

ஆனாலும் நேற்று மாலை வெகு நேரமாகியும் கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2-வது நாளாக நேற்றும் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் கேன் மூலம் பால் வினியோகிப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து கேனில் கொண்டு வந்து பால் வினியோகிக்கப்பட்டது. அதனை சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Next Story