அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா


அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 May 2020 12:24 PM IST (Updated: 2 May 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

அரியலூர் நகரில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த திங்கட்கிழமை முதல் படிப்படியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 8 போலீசாருக்கும் உடனடியாக சளி மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பின்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது.

கணக்கெடுக்கும் பணி

அப்பகுதிக்கு நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வாகனங்களில் சென்று வீடு மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்துள்ளனர். மேலும் அவர் பயிற்சி அளித்த மோப்பநாய்கள் வசிக்கும் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் நகரம், எருதுக்காரன்பட்டி, வாலாஜாநகரம், தவுத்தாய்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 ஆயிரம் பேரை சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், 2 சுகாதார செவிலியர் மற்றும் 4 அங்கன்வாடி பணியாளர்கள் என 50 பேர் கொண்ட குழு தலா 50 வீடுகளை கண்காணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 ஆக உயர்ந்துள்ளது

இந்த மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்றும், சர்க்கரை நோயாளிகள் உள்ளனரா?, வயதான முதியவர்கள் மட்டும் வசிக்கின்றனரா?, சமீபத்தில் வெளியூரில் இருந்து யாராவது அரியலூருக்கு வந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு குறிப்புகளை எடுத்து வருகின்றனர். கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்காரருடன் சேர்த்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும், வாசலில் வேப்பிலை தோரணம் கட்டியும் வருகின்றனர்.

Next Story