ரேஷன் கடைகளில் நாளை முதல் ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி - கலெக்டர் அறிவிப்பு


ரேஷன் கடைகளில் நாளை முதல் ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 11:15 PM GMT (Updated: 2 May 2020 7:13 PM GMT)

ரேஷன் கடைகளில் நாளை முதல் ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு அறிவிப்பின்படி இந்த மாதம்(மே) அத்தியாவசிய பொருட்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தகுதியான அளவின்படி அனைத்து பொருட்களும் விலையின்றி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கார்டுதாரர்கள் பெற வசதியாக நாளை முதல் நாள் ஒன்றுக்கு 200 ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் வகையில் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை சமூக இடைவெளி விட்டு வாங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பிச்சம்பாளையம்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரேஷன்கடை பணியாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை வழங்கி வருகிறார்கள்.

ஒரு ரேஷன்கார்டுக்கு பொருட்கள் வாங்க ஒருவர் மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் கூடுதலாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு அரிசி வழங்கப்படும்.ஏப்ரல் மாதத்துக்கான கூடுதல் அரிசி மே மாதத்தில் 50 சதவீதமும், மீதம் உள்ள 50 சதவீதம் ஜூன் மாதத்திலும் வழங்கப்படும்.

ரேஷன் கடையில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்து ரேஷன் பொருட்களை பெற்றுச்செல்லலாம். இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0421 2971116 எண்ணில் தெரிவிக்கலாம். 

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story