“தினத்தந்தி” செய்தி எதிரொலி; குற்றாலம் ஐந்தருவியில் போலீஸ் பாதுகாப்பு
“தினத்தந்தி“ செய்தி எதிரொலியாக குற்றாலம் ஐந்தருவியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென்காசி,
கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு எந்திரம் தீவிரமாக இயங்கி வருகிறது.
சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை போன்ற அனைத்து துறையினரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சேவை செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு வெளியே வருபவர்களை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் எதையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் குற்றாலம் ஐந்தருவியில் ஒரு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் நேற்று “தினத்தந்தி“யில் வெளியானது.
போலீஸ் பாதுகாப்பு
அதன் எதிரொலியாக நேற்று ஐந்தருவியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தடையை மீறி குளிக்க வருபவர்களை தடுக்கும் விதத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அருவிக்கரையில் தினமும் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் போலீசார் சாப்பிட சென்ற நேரத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்“ என்றார். அரசு எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால்தான் நன்மை கிடைக்கும் என்றும் காவல்துறை பொதுமக்களின் நலனுக்காக தான் செயல்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story