தண்ணீர் இல்லாத தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை: 4½ மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் இல்லாத தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் 4½ மணி நேரம் போராடி மீட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவபெட்டா காப்புக்காட்டில், வன விலங்குகள் தாகத்தை தணிக்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொளுவபெட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் தொட்டியில் தண்ணீர் குடிக்க நேற்று அதிகாலை வந்தன.
அப்போது கூட்டத்தில் இருந்த நான்கு மாத குட்டி யானை, தண்ணீர் இல்லாத ஒரு தொட்டியில் தவறி விழுந்தது. தாய் யானை உள்பட பிற யானைகள், குட்டியை மீட்க முயற்சி செய்தன. ஆனால் குட்டியை மீட்க முடியாததால், யானைகள் பிளிறின. இதைக் கேட்ட மலை கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனச்சரகர் சுகுமார் தலைமையில், வனவர் கதிரவன், வனக்காப்பாளர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது தண்ணீர் தொட்டியை சுற்றி நின்ற தாய் யானை உள்ளிட்ட யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
பின்னர் பொக்லைன் வாகனம் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் மணலை நிரப்பி 4½ மணி நேரமாக வெளியே வர போராடி கொண்டிருந்த குட்டி யானையை மீட்டு, தாயுடன் சேர்த்தனர்.
Related Tags :
Next Story