பவளக்கனிவாய் பெருமாள் செல்லாமல் நாளை நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் - வரலாற்றில் இதுவே முதல் முறை


பவளக்கனிவாய் பெருமாள் செல்லாமல் நாளை நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் - வரலாற்றில் இதுவே முதல் முறை
x
தினத்தந்தி 3 May 2020 5:45 AM IST (Updated: 3 May 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் பவளக் கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்காமல் வரலாற்றிலேயே முதல் முறையாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை (திங்கட்கிழமை) நடக்க இருக்கிறது.

திருப்பரங்குன்றம்,

மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் நாளை (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்டியை சுமந்து, மீனாட்சி பட்டணத்திற்கு செல்வார்.

இதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். இதில் குன்றத்து பவளக்கனிவாய் பெருமாள், தனது தங்கை மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுப்பார். இத்தகைய நடைமுறை காலம் காலமாக நடைபெற்று வந்துள்ளது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு முதல் நாளே திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு செல்வது மரபு. அந்த வகையில் நாளை, திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சகல பரிவாரங்களோடு பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்ல வேண்டும்.

ஆனால் ஊரடங்கு காரணமாக சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆகவே பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கையின் திருக்கல் யாணத்தில் தாரை வார்த்து கொடுக்காத நிலை வர லாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத் துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று இருந்தால் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று தாரை வார்த்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அம்மனின் திருக்கல்யாணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வேண்டுகோளுக் காகவும் உற்சவமூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக் கிறது.

அதுவும் பக்தர்கள் இல்லாமல் 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணம் நடை பெறுவதால் திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான், பவளக் கனிவாய் பெருமாள் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Next Story