சேலத்தில் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும்: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவு


சேலத்தில் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும்: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2020 4:45 AM IST (Updated: 3 May 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்

சேலம், 

சேலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூடிய இடங்களை தவிர, வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். இதன் மூலமாகவும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களுக்கு சொந்தமான ஏ.டி.எம் மையங்களில் காவலாளிகளை கொண்டு ஏ.டி.எம். மையங்களை தினமும் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். மேலும், பணியில் உள்ள அனைத்து காவலாளிகளும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஏ.டி.எம். மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு கிருமி நாசினி மருந்து வழங்கி கைகளை சுத்தப்படுத்திய பின்னரே, ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என காவலாளிகளுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் அறிவுறுத்திட வேண்டும். எனவே காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் மூலம் தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காவலாளிகளை நியமித்து, தொற்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை மூட வேண்டும். அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களும் காவலாளிகளின் பாதுகாப்புடன் இயங்குகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் திடீர் தணிக்கையின் போது காவலர்கள் இல்லாமல் இயங்கும் ஏ.டி.எம் மையங்கள் கண்டறியப்பட்டால் உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே சேலம் மாநகர பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story