உழவர் சந்தையில் இருந்து 50 கடைகள் அம்மாபேட்டைக்கு மாற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
சேலம் பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்ட உழவர்சந்தையில் இருந்த 50 கடைகள் அம்மாபேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சூரமங்கலம் உழவர்சந்தை நேற்று முன்தினம் முதல் 3 ரோடு அருகே சென்னீஸ் மைதானத்துக்கு (ஜவகர் மில் திடல்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சேலம் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் 100 காய்கறி கடைகளில் கடை எண் 51 முதல் 100 வரையிலான 50 கடைகள் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அம்மாபேட்டை 36-வது வார்டில் உள்ள அன்னை இந்திராகாந்தி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செயல்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேசமயம் மீதமுள்ள 50 கடைகள் சேலம் பழைய பஸ் நிலையத்திலேயே வழக்கம் போல் செயல்படும். எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். காய்கறி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டுமெனவும், அதனை மீறுவோர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பள்ளி மைதானத்தில் காய்கறிகள் கடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இங்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முக கவசம் அணிந்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story