விளைவித்த காய்கறிகளை விற்க சாலைக்கு வந்த விவசாயிகள்


விளைவித்த காய்கறிகளை விற்க சாலைக்கு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 3 May 2020 4:09 AM IST (Updated: 3 May 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விவசாயிகளே சாலைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

ஊரடங்கால், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விவசாயிகளே சாலைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

விவசாயம் நிறைந்த பகுதி

தஞ்சை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இந்த பகுதி முழுவதும் காவிரி நீரை நம்பியே சாகுபடி நடந்து வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கரும்பு, மக்காச்சோளம், எள், உளுந்து, சூரியகாந்தி, கத்தரிக்காய், பூக்கள், வெண்டைக்காய், வெள்ளரி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது கோடை நெல் சாகுபடி 20 ஆயிரம் எக்டேரில் நடந்து முடிந்துள்ளது. மேலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர ஆங்காங்கே பணப்பயிர்களான கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

சாலைக்கு வந்த விவசாயிகள்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை உள்ளது. இதனால் விவசாயிகள் மட்டும் அல்லாது பல்வேறு தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

காய்கறிகளை உற்பத்தி செய்த விவசாயிகள், வாகனங்கள் மூலம் மொத்த சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வந்தார்கள். இந்த நிலையில் ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இவர்களில் சில விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

பச்சைப்பசேல் காய்கறிகள்

தஞ்சை-மன்னார்குடி நெடுஞ்சாலையில் சாலையோரத்தின் இருபுறமும் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைபோட்டுள்ளனர். அதாவது தாங்கள் விளைவித்த காய்கறிகளை தாங்களே பறித்துக்கொண்டு வந்து சாலையோரத்தில் சாக்குப்பையில் கொட்டி வியாபாரம் செய்து வருகிறார்கள். அதிலும் சில விவசாயிகள் குடும்பத்துடன் வந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். விற்பனை ஆக, ஆக விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்று தாங்கள் விளைவித்த காய்கறிகளை பறித்து வந்து விற்பனைக்காக வைக்கிறார்கள்.

இந்த காய்கறிகள் பறித்த உடன் விற்பனைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதால் வாடாமல், வதங்காமல், பச்சைப்பசேல் என்று உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பெரும்பாலானோர் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இறங்கி வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். நியாயமான விலையில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்வதால் இங்குள்ள கடைகளில் விற்பனை செய்யும் காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

வெள்ளரிப்பழங்கள் விற்பனை

இந்த பகுதிகளில் காய்கறிகள் தவிர பனைநுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றையும் விற்பதால் இந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் இறங்கி இவைகளை சாப்பிட்டு தங்களின் தாகத்தை தீர்த்துவிட்டு செல்கிறார்கள்.

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, வரவுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இவ்வாறு காய்கறிகளை பறித்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது வெள்ளரிப்பழங்களும் அதிக அளவில் விளைவிக்கப்படுவதால் அதையும் விற்பனைக்கு கொண்டு வந்து குவித்து வைக்கிறார்கள். வெள்ளரிப்பழங்கள் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுவதால் அதையும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

பல்வேறு சிரமங்கள்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “பெரிய அளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் வாகனங்கள் மூலம் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். நாங்கள் குறைந்த அளவு சாகுபடி செய்துள்ளதால் அதை எடுத்துச்செல்வதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் விளைவித்த காய்கறிகளை நாங்களே சாலையோரத்தில் விற்பனை செய்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு வயலில் இருந்து காய்கறிகளை பறித்துக்கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்.

மதியம் 1 மணிக்கு பிறகு கடைகள் போடக்கூடாது என போலீசார் கூறுவதால் நாங்கள் 1 மணி வரையில்தான் விற்பனை செய்வோம். அதன் பின்னர் சென்று விடுவோம். வெளி இடங்களில் கிடைக்கும் விலையை விட எங்களிடம் விலை குறைவாக இருப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலானோர் வாகனங்களை நிறுத்தி விட்டு வாங்கி செல்கின்றனர்”என்றனர்.

Next Story