வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வரும் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிப்பு
வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வரும் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வேதாரண்யம்,
வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வரும் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு தேக்கம் அடைவதை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் பழனிகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர் அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒரு நாளைக்கு எத்தனை லாரிகளில் வேண்டுமானாலும் உப்பு ஏற்றுமதி செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நூற்றுக்காணக்கான லாரிகள் உப்பு ஏற்றுவதற்கு வேதாரண்யம் பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தன.
கொரோனா அச்சம்
பல ஊர்களில் இருந்து லாரிகள் வர தொடங்கியதால் அதில் வரும் டிரைவர்கள், கிளனர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக கொரோனா தொற்று பரவும் என வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் முருகு, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஒன்றிய ஆணையர்கள் வெற்றிச்செல்வன், ராஜூ, மருத்துவ அதிகாரி சுந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வரும் லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டனர். இதுதொடர்பாக உப்பு வியாபாரிகள், லாரி புரோக்கர் அசோசியேஷன் நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டது.
கிருமி நாசினி
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள திருவாரூர் மாவட்ட எல்லையான தாணிகோட்டகத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து உப்பு ஏற்ற வரும் லாரிகளை நிறுத்தி கிருமி நாசினி தெளிப்பது என்றும், டிரைவர், கிளனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களை அங்கேயே தங்க வைப்பது என்றும், ஒரு நாளைக்கு 40 லாரிகளை உள்ளூர் டிரைவர்கள் மூலமாக இயக்கி உப்பு ஏற்றி வர செய்து, மாவட்ட எல்லையில் சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் ஒப்படைக்க செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வேதாரண்யம் அருகே தாணிகோட்டகத்தில் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் லாரி டிரைவர்கள், அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். இதற்கான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் லாரி புரோக்கர் அசோசியேஷன் சார்பில் வேதாரண்யம் தாசில்தார் முருகுவிடம், உப்பு ஏற்றுமதியால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் உப்பு ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story