சர்வதேச நிதி சேவை மைய தலைமையகம் மும்பையில் அமைய காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
சர்வதேச நிதி சேவை மைய தலைமையகம் மும்பையில் அமைய காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
மத்திய அரசு குஜராத் மாநிலம் காந்திநகரை சர்வதேச நிதி சேவை மைய தலைமையகம் (ஐ.எப்.எஸ்.சி.) என அரசிதழில் வெளியிட்டது. இந்தநிலையில் மாநில வருவாய் துறை மந்திரி பாலாசாகேப் தோரட், மத்திய அரசு நாட்டின் நிதி தலைநகரான மும்பையின் அந்தஸ்தை குறைக்க குஜராத்தில் சர்வதேச நிதி சேவை மைய தலைமையகத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடி அரசை குற்றம்சாட்ட விரும்புபோது சிலருக்கு தேவைக்கு ஏற்றவாறு ஞாபக மறதி ஏற்படுகிறது. சர்வதேச நிதி சேவை மையத்தை அமைப்பது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசின் உயர்மட்ட கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது சர்வதேச நிதி சேவை மையத்தை அமைப்பது குறித்து மராட்டிய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசும் பரிசீலிக்கவில்லை.
காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை
காந்திநகரில் சர்வதேச நிதி சேவை மையம் செயல்படுவதால் அது தலைமையகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது மார்பில் அடித்து கொள்கிறவர்கள் (காங்கிரஸ்) தான் கடந்த 2007 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தார்கள். அப்போது அவர்கள் சர்வதேச நிதி சேவை மையத்துக்காக எதுவும் செய்யவில்லை. இந்த வாய்ப்பை அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பறித்து கொண்டார்.
மும்பையில் சர்வதேச நிதி சேவை மையம் அமைவதற்கான இயற்கையான அமைப்புகள் உள்ளன. மராட்டிய அரசு விரும்பினால் இப்போதும் மும்பை சர்வதேச நிதி சேவை மையமாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story