பணி நிமித்தமாக சென்னைக்கு சென்ற குமரியைச் சேர்ந்த நர்சுக்கு கொரோனா பாதிப்பு கணவர் உள்பட 12 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு


பணி நிமித்தமாக சென்னைக்கு சென்ற குமரியைச் சேர்ந்த நர்சுக்கு கொரோனா பாதிப்பு கணவர் உள்பட 12 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 12:09 AM GMT (Updated: 3 May 2020 12:09 AM GMT)

பணி நிமித்தமாக குமரியில் இருந்து சென்னைக்கு சென்ற நர்சுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குலசேகரம், 

பணி நிமித்தமாக குமரியில் இருந்து சென்னைக்கு சென்ற நர்சுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடன் சென்ற கணவர் உள்பட 12 பேரின் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குமரியில் 16 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் முதன் முதலாக 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த நபர்கள் மூலமாக மேலும் 11 பேருக்கு தொற்று பரவியது. பின்னர் கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியான நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மேலும், அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர தடுப்பு பணியை மேற்கொண்டனர். பிளச்சிங் பவுடர் போடுதல், கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுஒருபுறமிருக்க, கொரோனா பாதித்த 16 நோயாளிகளுக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் பலனாக, மாவட்டத்தில் இதுவரை 10 பேர் குணமடைந்து கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

நர்சுக்கு தொற்று

அதே சமயத்தில், கடந்த 17 நாட்களாக குமரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று உருவாகவில்லை. மேலும், கொரோனா பாதித்த மற்ற 6 பேரும் இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை உருவானது. இதனால் குமரி மாவட்டம், சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. இது குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நர்சு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குலசேகரம் அருகே முல்லைபள்ளிவிளை கிராமத்தை சேர்ந்த 30 வயது நர்சு ஒருவர், தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார்.

சென்னையில்...

இதற்கிடையே அவர் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பணி கிடைத்தது. மேலும், உடனடியாக லேப்-டெக்னீசியன் பணியில் சேரும்படி அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த 29-ந் தேதி அந்த நர்சு, தன்னுடைய கணவருடன் சென்னைக்கு கார் மூலம் பயணித்தார். காரை குலசேகரம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டினார். மேலும், அவர்களுடன் நர்சு கணவரின் நண்பரும் சென்றார்.

குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்றதால், பணியில் சேரும் போது நர்சுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே நர்சின் கணவர், நண்பர் மற்றும் டிரைவர் ஊருக்கு திரும்பி விட்டனர்.

குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நர்சுக்கு கொரோனா பாதிப்பு இருந்த விவரம் குமரி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அவர் வசித்த முல்லைப்பள்ளிவிளை கிராமத்திற்கு படையெடுத்தனர். நர்சுடன் தங்கி இருந்த அவருடைய தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்தினர். மேலும், நர்சு கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், டிரைவர், அவரது குடும்பத்தினர், நண்பர், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் 12 பேரின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்ற நர்சுக்கு கொரோனா தொற்று யார் மூலம் பரவியது? என்பது தெரியவில்லை. சென்னையில் அறிகுறியே இல்லாமல் பரவி வருவதால், குமரி நர்சுக்கு அங்கேயே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

எனினும், கொரோனாகட்டுக்குள் இருந்த சமயத்தில், நர்சுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் குமரியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story