பல பெண்களை ஏமாற்றிய குமரி காசியை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டில் மனு
பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
நாகர்கோவில்,
பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பெண் டாக்டரை ஏமாற்றினார்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கி பழகினார். பின்னர் அவரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதோடு, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.
மேலும், அவருடைய ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். காசியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பெண் டாக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் காசி மீது அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெண் டாக்டரை ஏமாற்றியது போல் பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குண்டர் சட்டம்
இதற்கிடையே நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயர் ஒருவர் காசி மீது ஒரு புகார் அளித்தார். அதாவது, தன்னிடம் நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை காசி அபகரித்ததாக புகார் அளித்தார். அதன் பேரில் காசி மீது நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் காசி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து நாங்குநேரி சிறையில் இருந்த காசியை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த பரபரப்புக்கு இடையே காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காசியால் பள்ளி மாணவிகள் முதல் டாக்டர் வரை பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர் .
மனுதாக்கல்
அதன்படி காசியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக காசி பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டுக்கு நேற்று அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காசி அழைத்து வரப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story