குமரியில் செங்கல் சூளைகள் 5-ந் தேதி முதல் செயல்படலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


குமரியில் செங்கல் சூளைகள் 5-ந் தேதி முதல் செயல்படலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x

குமரியில் 5-ந் தேதி முதல் செங்கல்சூளைகள் செயல்படலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

நாகர்கோவில், 

குமரியில் 5-ந் தேதி முதல் செங்கல்சூளைகள் செயல்படலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

செங்கல்சூளை செயல்பட அனுமதி

குமரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் அருகில் தங்கி இருப்பவர்களை கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து நாளை மறுநாள் (அதாவது 5-ந் தேதி) முதல் செயல்படலாம். ஆனால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வர அனுமதி இல்லை. செங்கல் சூளையில் பணியாற்றுபவர்கள் முககவசம் அணிய வேண்டும், அவ்வப்போது கை கழுவ ஏதுவாக கிருமி நாசினிகள், சோப்பு, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள்

கட்டுமான பணிகள் மேற்கொள்பவர்கள் 10 தொழிலாளர்களுக்கு மிகாமல் பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் இதயநோய் போன்ற தீவிர நோய் உள்ளவர்களையும், சளி, தும்மல், இருமல், சுவாச பிரச்சினைகள், காய்ச்சல் உள்ள நபர்களையும் கண்டிப்பாக பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

புகைப்பிடித்தல் கூடாது

பணித்தளங்களில் தொழிலாளர்கள் குழுவாக அமர்வதும், உணவுகளை பகிர்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பணித்தளங்களில் புகைபிடித்தல், பாக்கு மெல்லுதல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது. பணியிடங்களில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவம், இறப்பு, பிறப்பு ஆகிய காரணங்களுக்காக உரிய அனுமதியுடன் வருபவர்கள் மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story