வீடுகளுக்கு சென்று காய்கறி விற்பனை நாகர்கோவில் உழவர் சந்தை வெறிச்சோடியது


வீடுகளுக்கு சென்று காய்கறி விற்பனை நாகர்கோவில் உழவர் சந்தை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 3 May 2020 1:31 AM GMT (Updated: 3 May 2020 1:31 AM GMT)

வீடுகளுக்கு சென்று காய்கறி விற்பனை செய்யப்படுவதால் நாகர்கோவில் உழவர் சந்தை வெறிச்சோடியது.

நாகர்கோவில், 

வீடுகளுக்கு சென்று காய்கறி விற்பனை செய்யப்படுவதால் நாகர்கோவில் உழவர் சந்தை வெறிச்சோடியது.

கூட்டம் குறைந்தது

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க எந்த தடையும் இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது.

ஊரடங்கு காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக குமரி மாவட்டத்தில் பல இடங்களில் தற்காலிக சந்தையாக பஸ்நிலையங்கள் மாற்றப்பட்டன. அங்கு சென்று பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர். அதன்படி அமைக்கப்பட்ட நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே சமயத்தில் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் காய்கறி விற்பனை நடந்தது. மேலும் உழவர் சந்தை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் உழவர் சந்தை உள்ளிட்ட மற்ற சந்தைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது.

இதுபற்றி வியாபாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

வீடுகளுக்கே சென்று வழங்குவதால்...

கனகமூலம் சந்தை வடசேரி பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் தினமும் ஏராளமான மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றார்கள். ஆனால் கடந்த சில தினங்களாகவே கூட்டம் குறைந்து வருகிறது. ஏனெனில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை நடமாடும் அங்காடியால் மாநகராட்சி நிர்வாகமே தன்னார்வலர்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறது. இதுபோக தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் தொழில் அதிபர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு நேரில் சென்று வழங்குகிறார்கள். இதன் காரணமாக மக்கள் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள். அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தனர்.வீடுகளுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாலும், ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் உழவர் சந்தை ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. எனவே உழவர் சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story