நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் திரண்டனர் காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் திரண்டனர் காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 3 May 2020 3:00 AM GMT (Updated: 2020-05-03T07:35:10+05:30)

நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் காய்கறி, இறைச்சி கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

நெல்லை, 

நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் காய்கறி, இறைச்சி கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டதையொட்டியும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையொட்டியும் முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனால் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள் நினைத்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை நேற்று வாங்கினர். இதனால் பாளையங்கோட்டை உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. அதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், டவுன் பொருட்காட்சி திடல் காய்கறி கடைகள், நெல்லை டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தை ஆகிய இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.

நெல்லை டவுன் ரத வீதிகளில் மொத்த வியாபார மளிகை கடைகள் உள்ளன. அந்த கடைகளிலும் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது. பாளையகோட்டை சிவன் கோவில் தெருவில் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிளிலும் வந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

இறைச்சி கடைகள்

நெல்லை டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தை பகுதியில் இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்டு இறைச்சி, கோழி, மீன் ஆகிய கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்துக்குள் நின்று இறைச்சிகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Next Story