கோடை வெயிலால் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


கோடை வெயிலால் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 3 May 2020 7:51 AM IST (Updated: 3 May 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலால் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏர்வாடி,

கோடை வெயிலால் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெரியகுளம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் திருக்குறுங்குடி பெரியகுளமும் ஒன்றாகும். இந்த குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மழை பெய்து குளம் நிரம்பி ததும்பியது. அப்போது குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்தன.

குறிப்பாக நடுமடையில் ஏற்பட்ட பழுதால் கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் எழுந்தது. குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியிருந்ததால் மடையை சீரமைக்க முடியாத நிலை நிலவியது. இதையடுத்து மடை அடைக்கப்பட்டது. மேலும் குளத்திற்கு வரும் தண்ணீரும் வேறு கால்வாயில் திருப்பி விடப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

இந்த நிலையில் தற்போது திருக்குறுங்குடி பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் திருக்குறுங்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வற்றியது. ஆங்காங்கே பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. குளம் வறண்டுள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு எழும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பழுதடைந்துள்ள மடைகளை சீரமைக்க இதுதான் சரியான தருணம் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே மடைகளை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story