நெல்லை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பணி, சுற்றுலா நிமித்தம் காரணமாக வந்தவர்கள், மாணவ-மாணவிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உறவினர்களை பார்க்க வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவர்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளான கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து தமிழகத்திலேயே தங்கி உள்ளனர்.
அவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை சிறப்பு ரெயில் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் கட்டிடப்பணி, தொழிற்சாலை, ரெயில்வே துறையில் ஒப்பந்த கூலி வேலை செய்து வருகிறார்கள். சிலர் சாலையோர கடைகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலை இல்லாமல் இங்கேயே தங்கி உள்ளனர்.
சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் வடமாநில தொழிலாளர்கள் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
கணக்கெடுக்கும் பணி தீவிரம்
இதையடுத்து அந்தந்த பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்து வருகிறார்கள். சொந்த ஊர் திரும்பாதவர்கள் விண்ணப்பம் செய்யவில்லை. அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நெல்லை அருகே உள்ள பழைய பேட்டை, கண்டியப்பேரியில் தங்கி இருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள், துலுக்கர்குளத்தில் தங்கியுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் அந்தந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்து வருகிறார்கள். கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் அவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் அங்கு இருந்து ரெயில் மூலம் அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story