திருச்சியில் சிலிண்டர் விலை ரூ.216 குறைந்தது: ஊரடங்கால் சமையல் கியாஸ் பயன்பாடு 20 சதவீதம் அதிகரிப்பு


திருச்சியில் சிலிண்டர் விலை ரூ.216 குறைந்தது: ஊரடங்கால் சமையல் கியாஸ் பயன்பாடு 20 சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 8:30 AM IST (Updated: 3 May 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.216 குறைந்தது. ஊரடங்கால் வீட்டில் முடங்கிய மக்கள் அடிக்கடி சமைப்பதால் கியாஸ் பயன்பாடு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

திருச்சி, 

திருச்சியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.216 குறைந்தது. ஊரடங்கால் வீட்டில் முடங்கிய மக்கள் அடிக்கடி சமைப்பதால் கியாஸ் பயன்பாடு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மானிய விலை கியாஸ் சிலிண்டர்

இன்றைய காலக்கட்டத்தில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து வீடுகளிலும் சமையல் கியாஸ் கொண்டுதான் சமையல் செய்வதை பார்க்க முடிகிறது. ஒரு சில வீடுகளில் வெந்நீர் வைப்பதற்காக மட்டும் வீட்டின் கொல்லைப்புறத்தில் விறகு அடுப்பு பயன்பாட்டை பார்க்க முடியும்.

ஆரம்பத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களை அரசு மானிய விலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தது. சிலிண்டர் ரூ.200 முதல் ரூ.350 வரையிலும் மானிய விலையில் கொடுக்கப்பட்டது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், சிலிண்டருக்கான முழுத்தொகையையும் செலுத்திவிட்டு, மானியத்தொகையை கியாஸ் ஏஜென்சிகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்துவது நடைமுறைக்கு வந்தது. அதேவேளையில் ஓட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவைக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டருக்கு மானியம் கிடையாது.

ஊரடங்கால் பயன்பாடு அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கான காய்கறிகள், மளிகை பொருட்கள் மட்டுமே வாங்க வெளியில் சென்று வருகிறார்கள். எஞ்சிய நேரமெல்லாம் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இதனால், நகர்ப்புறங்களில் உள்ள வீட்டில் அடிக்கடி சமையல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான எண்ணெய் பதார்த்தங்களையும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இதனால், சமையல் கியாஸ் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அவற்றின் தேவை அதிகரித்திருப்பதாக கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிலிண்டருக்கு ரூ.216 குறைவு

சமையல் கியாஸ் விலையிலும் மாதந்தோறும் சிறிய மாற்றங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று 790 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. நேற்று முன்தினம் முதல் சிலிண்டருக்கு 216 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.574-க்கு வினியோகிக்கப்படுகிறது.

அதே வேளையில் 19 கிலோ எடைகொண்ட வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. அவை வழக்கம்போல ரூ.1,133-க்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

Next Story