திருச்சியில் நாளை முதல் கோர்ட்டுகள் செயல்படும் காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்த ஏற்பாடு


திருச்சியில் நாளை முதல் கோர்ட்டுகள் செயல்படும் காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 3 May 2020 9:21 AM IST (Updated: 3 May 2020 9:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கோர்ட்டுகள் நாளை முதல் செயல்பட உள்ளன. வழக்குகளை காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கோர்ட்டுகள் நாளை முதல் செயல்பட உள்ளன. வழக்குகளை காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மூடப்பட்ட கோர்ட்டுகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் மூடப்பட்டன. வழக்கு விசாரணைகள் கணினி தகவல் முறையில் தள்ளி வைக்கப்பட்டன. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு அறிவித்தது.

இந்நிலையில் மே 1-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் மே 4-ந்தேதி (நாளை) முதல் 31-ந் தேதி வரை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) முறையில் செயல்படுவதற்கும், கோர்ட்டில் 33 சதவீத அளவில் பணியாளர்கள் சமூக விலகலை கடைபிடித்து பணியாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

ஜாமீன்

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி முரளி சங்கர், திருச்சி கூடுதல் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், லால்குடி, முசிறி, துறையூர், மணப்பாறை கோர்ட்டு நீதிபதிகள் ஆகியோருக்கு குறிப்பாணை அனுப்பி உள்ளார். இதன் நகல்கள் திருச்சி வக்கீல் சங்கம், குற்றவியல் வக்கீல்கள் சங்கம் ஆகியற்றிற்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த குறிப்பாணையின்படி திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி மே 5-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை குற்ற வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் வழங்குதல், மோட்டார் வாகன விபத்துக்கான இழப்பீடு கோருதல், விவாகரத்து வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க நியமிக்கப்பட்டு உள்ளார். 18-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை மூன்றாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்த பணிகளை கவனிப்பார்.

மகிளா கோர்ட்டு

பாலியல் வன்முறைகளில் இருந்து சிறார்களை பாதுகாப்பது தொடர்பான போக்சோ வழக்குகளை மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி விசாரிப்பார். இதேபோல, அனைத்து நீதிபதிகளும் விசாரிக்க வேண்டிய வழக்குகள் பற்றி குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்த கோர்ட்டுகள் நாளை முதல் மீண்டும் செயல்பட உள்ளன. நீதிமன்ற கட்டணங்களை எப்படி செலுத்துவது என்பது பற்றி ஐகோர்ட்டு உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படாததால் வழக்கு நடத்துபவர்களும், வக்கீல்களும் அதற்கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story