போலீஸ் வேலைக்கு புதிதாக தேர்வானவர்கள் பணியில் சேர அழைப்பு 521 பேர் இன்று திருச்சி வருகின்றனர்


போலீஸ் வேலைக்கு புதிதாக தேர்வானவர்கள் பணியில் சேர அழைப்பு 521 பேர் இன்று திருச்சி வருகின்றனர்
x
தினத்தந்தி 3 May 2020 9:38 AM IST (Updated: 3 May 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் வேலைக்கு புதிதாக தேர்வானவர்கள் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 521 பேர் இன்று திருச்சி வருகின்றனர்.

திருச்சி, 

போலீஸ் வேலைக்கு புதிதாக தேர்வானவர்கள் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 521 பேர் இன்று திருச்சி வருகின்றனர்.

ஊரடங்கில் பாதுகாப்பு பணி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது தவிர, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை போலீசார் சுழற்சி முறையில் இரவு, பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

இதுதவிர, சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி, நெடுஞ்சாலை ரோந்து பணி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அடையாளம் கண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் என போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகளுக்கெல்லாம் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் ஊர்க்காவல்படை, என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆசிரியர்கள் என பலரும் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

போலீஸ் வேலைக்கு தேர்வு

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் நிலை காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முறைப்படி பயிற்சி தொடங்கப்பட்டு, 9 மாத காலம் பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்வான இளைஞர்களை பயன்படுத்திக்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

521 பேர் வருகை

அதன்படி, புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5,496 பேர் உடனடியாக பணியில் சேர அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் பணிபுரிய 521 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணிக்கு அழைப்பு கடிதத்துடன் நேரில் வருகிறார்கள். இவர்களுக்கு சில நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் பணிக்கு அனுப்பப்படுவார்கள். இதன்மூலம் புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பே களப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story