வேலூர் மாவட்ட எல்லைப்பகுதி சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்


வேலூர் மாவட்ட எல்லைப்பகுதி சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 May 2020 9:46 AM IST (Updated: 3 May 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேலூர்,

வேலூர் மாவட்ட எல்லைப்பகுதிகளான பூட்டுத்தாக்கு, வல்லம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, திருவலம், கீரைசாத்து, தெங்கால், முத்தரசிகுப்பம், பரதராமி, சைனகுண்டா, மாதனூர், பத்தலப்பள்ளி, அழிஞ்சிகுப்பம், ஓணாங்குட்டை ஆகிய 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் சுழற்சி முறையில் வெளிமாநிலங்கள் மற்றும் பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களை கொரோனா பரிசோதனை செய்து அனுப்புகிறார்கள். கொரோனா அறிகுறி காணப்பட்டால் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள பூட்டுத்தாக்கு, வல்லம், திருவலம், கீரைசாத்து, தெங்கால், முத்தரசிகுப்பம் ஆகிய சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அங்கிருந்த அரசு ஊழியர்களிடம் கூறுகையில்,

வெளி மாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். வாகனங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அந்த வாகனத்துக்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து அந்தந்த தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது, அந்தந்த சோதனை சாவடிகளில் கொரோனா தொற்று பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story