அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பழங்கள் பறிமுதல் கரூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
கரூரில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பழங்களை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கரூர்,
கரூரில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பழங்களை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அத்தியாவசிய தேவைகளான காய்கறி உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்கவும், அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் வீதிகளில் இருசக்கர வாகனங் களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படு வதுடன் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அந்த வாகனங்கள் படிப்படியாக உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
மக்கள் நடமாட்டம்
கரூர் மாவட்டத்தில், ஊரடங்கு எப்படி உள்ளது? என்றும், மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் இருக்கிறதா? என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மற்றும் போலீசார் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட், திருமாநிலையூர் பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் அதிக அளவில் பழங்களை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம், கூட்டமாக வந்து பழங்களை வாங்கி சென்றனர்.
500 கிலோ பழங்கள் பறிமுதல்
இதனால் தொற்று ஏற்படும் சூழல் உள்ள கரூர் நகராட்சி ஆணையர் சுதாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நேற்று மேற்கண்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் நகராட்சி அதிகாரிகள், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 5-க்கும் மேற்பட்ட கடைகளில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பழங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த வியாபாரிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பழங்கள் நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story