மே மாத ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வினியோகம் தொடங்கியது
மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.
புதுக்கோட்டை,
மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.
ரேஷன் பொருட்கள்
கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது.
அதாவது 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் மற்றும் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 3 மாத காலத்திற்கு கூடுதல் அரிசி பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவு விலையின்றி வழங்கப்படும்.
டோக்கன் வினியோகம்
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில் டோக்கன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வீடு, வீடாக டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த ரேஷன் கடை பகுதியில் உள்ள வீடுகளுக்கு ரேஷன் ஊழியர்கள் டோக்கன்களை வழங்கினர். அந்த டோக்கனில் கடைக்கு வர வேண்டிய நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேதியில் வந்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெறலாம். டோக்கன் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு, வீடாக வினியோகிக்கப்பட உள்ளது.
150 குடும்ப அட்டைகள்
தினமும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தலா 150 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கடைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் டோக்கன் வினியோகிக்கப்படும் பணியை புதுக்கோட்டை அருகே குளத்தூர் காந்திநகரில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மிரட்டுநிலை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரி அக்பர் அலி ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story