சத்தியமங்கலம் பகுதிக்கு வியாபாரிகள் வராததால் கருப்பட்டியை விற்க முடியாமல் பனை மர தொழிலாளர்கள் தவிப்பு


சத்தியமங்கலம் பகுதிக்கு வியாபாரிகள் வராததால் கருப்பட்டியை விற்க முடியாமல் பனை மர தொழிலாளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 4:00 AM IST (Updated: 3 May 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பகுதிக்கு வியாபாரிகள் வராததால் கருப்பட்டியை விற்க முடியாமல் பனை மர தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், திங்களூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனைமரம் ஏறும் தொழில் முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது. மரம் ஏறும் தொழிலாளர்கள் தினமும் பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்கி அதை காய்ச்சி பனங்கருப்பட்டி உற்பத்தி செய்து வருகிறார்கள்.

அவ்வாறு உற்பத்தி செய்யும் பனங்கருப்பட்டிகளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் இங்கு வந்து கொள்முதல் செய்வது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. இதன்காரணமாக வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கருப்பட்டி வியாபாரிகள் சத்தியமங்கலம் பகுதிக்கு வரவில்லை.

வியாபாரிகள் வராததால் பனை மர தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த கருப்பட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பனை மர தொழிலாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் தினமும் கட்டாயமாக பனைமரம் ஏறி பதனீர் இறக்கி அந்த பதனீரை காய்ச்சி கருப்பட்டியை உற்பத்தி செய்தே தீரவேண்டும். பனங்கருப்பட்டி விற்பனை ஆகவில்லை என்பதற்காக பதனீர் இறக்காமல் இருக்க முடியாது. இதன்காரணமாக கடந்த 40 நாட்களாக உற்பத்தி செய்த கருப்பட்டியை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுடைய தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story