விளைச்சல் இருந்தும் விலை போகாத காய்கறிகள் - விவசாயிகள் கண்ணீர்
ஆலங்குளம் பகுதியில் காய்கறிகள் நல்ல விளைச்சல் இருந்தும், அவற்றுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆலங்குளம்,
பழங்காலத்தில் நாடோடிகளாக விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதர்கள், ஆற்றங்கரைகளில் விளைந்த பயிர்களை உண்டு விவசாயத்தை கற்றனர். அனைத்து நாகரிகங்களும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கின. தமிழர்கள் மண்ணின் வகைகளை அறிந்து பயிர் செய்ததையும், நீர்ப்பாசன முறைகளையும் சங்க இலக்கியங்களில் அறியலாம். உலகின் பழமையான கல்லணையை கட்டியதில் இருந்தே தமிழர்கள் விவசாயத்தில் சிறப்புற்று விளங்கியதை உணரலாம். நமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்கிறது.
நமது முன்னோர்கள் பாரம்பரிய இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ததால், உணவே மருந்தாக வாழ்ந்தனர். பின்னர் இயற்கை உரங்களை மறந்து, செயற்கை உரங்களை நாடியதால், மருந்தே உணவாகும் நிலை உருவானது. தற்போது பழமையின் பெருமையை உணர்ந்த பலரும் மீண்டும் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
மனிதர்களின் உடலுக்கு ஆற்றலை தரும் காய்கறிகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், அனைத்து காய்கறிகளையும் சம விகிதத்தில் உணவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
காய்கறி பயிர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குறிப்பன்குளம், காளத்திமடம், குருவன்கோட்டை, உடையாம்புளி, ஓடைமறிச்சான், தாழையூத்து, ராம்நகர், ஆண்டிப்பட்டி, கரும்புலியூத்து, கரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சுரைக்காய், கத்தரிக்காய், தடியங்காய், புடலங்காய், பாகற்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் கிணற்று பாசனம் மூலமே பயிரிடுகின்றனர். காய்கறி செடிகள் நடப்பட்ட 3 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகிறது. தற்போது காய்கறி செடிகள் நல்ல விளைச்சலை தந்தன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். அங்கு வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து, அவற்றை லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர். இதன்மூலம் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைத்து வந்தது.
விவசாயிகள் கண்ணீர்
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஊரடங்கு காரணமாக, பல்வேறு இடங்களிலும் குறைவான நேரமே காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. இதனால் அங்கு காய்கறிகள் பெருமளவில் தேக்கம் அடைவதால், அவற்றுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை.
இதனால் ஆலங்குளம் பகுதியில் கடந்த முறை பயிரிட்டபோது ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரையிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுரைக்காயை தற்போது ரூ.1-க்குதான் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதேபோன்று ஒரு கிலோ ரூ.40 வரையிலும் கொள்முதல் செய்யப்பட்ட கத்தரிக்காயை தற்போது ரூ.10-க்குதான் வாங்குகின்றனர். மேலும் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.4-க்கும், தக்காளி ரூ.10-க்கும், புடலங்காய் ரூ.6-க்கும் என்று குறைந்த விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும் செலவு செய்து பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து கண்ணீர் வடிக்கின்றனர்.
நிவாரண உதவி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை பெருமளவில் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். தற்போது ஊரடங்கு காரணமாக, கேரள மாநிலத்தில் சுழற்சி முறையில் குறைவான நேரமே ஒவ்வொரு பகுதியிலும் காய்கறி கடைகளை திறக்கின்றனர். இதனால் அங்கு பெருமளவில் காய்கறிகள் தேக்கம் அடைவதால், தேவைப்பாடு குறைந்து விலையும் குறைகிறது. இதனால் ஆலங்குளம் பகுதியில் காய்கறிகள் போதிய விளைச்சல் இருந்தும், அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
‘உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது‘ என்ற பழமொழிக்கு ஏற்ப, மாதக்கணக்கில் பாடுபட்டு உழைத்தும், உரிய விலை கிடைக்காததால் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே, அடுத்து எப்படி பயிர் சாகுபடி செய்வது? என்றே தெரியவில்லை. எனவே, விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மீண்டும் பயிரிடுவதற்கு கடன் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story