உடன்குடியில் மக்களை வாட்டி வதைக்கும் வெயில் - இளநீர், நுங்கு விற்பனை அமோகம்


உடன்குடியில் மக்களை வாட்டி வதைக்கும் வெயில் - இளநீர், நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 3 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-04T00:25:00+05:30)

உடன்குடியில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்கு இளநீர், நுங்கு விற்பனை அமோகமாக நடந்தது.

உடன்குடி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உடன்குடி பகுதியிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து ஒருவர் தான் வர வேண்டும், முககவசம் அணிந்து வர வேண்டும், சிறுவர்கள், முதியவர்களை அழைத்து வரக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெரும்பாலானோர், தள்ளுவண்டி, மினிலாரி போன்றவை மூலம் தெரு தெருவாக கொண்டு வந்து விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். இதனால் மக்கள் கடைகளுக்கு வருவது குறைந்து வருகிறது. உடன்குடி மெயின் பஜார் வீதிகள், பஸ் நிலைய பகுதி, சத்தியமூர்த்தி பஜார் ஆகிய இடங்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து உள்ளன. அங்கு பொதுமக்கள் குறைவாகவே வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இளநீர் விற்பனை அமோகம்

இது ஒருபுறம் இருக்க உடன்குடி பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. உடன்குடி, தண்டுபத்து, பரமன்குறிச்சி, சீர்காட்சி, செட்டியாபத்து, உதிரமாடன்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

உடன்குடியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பஜாருக்கு வரும் பொதுமக்கள், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், நுங்கு ஆகியவற்றை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். இதனால் அவற்றின் விற்பனை அமோகமாக நடந்தது. இளநீர், நுங்கு ஆகியவற்றை தெரு, தெருவாக கொண்டு சென்றும் விற்கப்பட்டது. இளநீர் ஒன்று ரூ.15-க்கும், நுங்கு ரூ.5-க்கும் விற்பனையானது. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

Next Story