நாமக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 8 இறைச்சி கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


நாமக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 8 இறைச்சி கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 4:45 AM IST (Updated: 4 May 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 8 இறைச்சி கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்த வாரத்தில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த தடையை மீறி இறைச்சி கடைகள் செயல்படுகிறதா? என நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், செல்வராஜ், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கணேசன், ஜெயராமன், கந்தசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முருகன் கோவில் பஸ் நிறுத்தம், பெய்யேரிக்கரை, பரமத்தி சாலை, மோகனூர் சாலை, குட்டை மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 8 இறைச்சி கடைகள் தடையை மீறி செயல்பட்டது தெரியவந்தது.

இந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் சுமார் 10 கிலோ இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். இனிவரும் காலங்களில் நகராட்சியின் உரிய அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story