ஊரடங்கு உத்தரவால் களை இழந்து காணப்படும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் களை இழந்து காணப்படுகின்றன.
மாமல்லபுரம்,
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மாமல்லபுரத்தில் கடந்த 40 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி காணப்படுகிறது.
எப்போதும் சுற்றுலா வாகனங்களால் பரபரப்பாக காணப்படும் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள், தெருக்களில் வாகன போக்குவரத்து இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் காணப் படுகிறது.
குறிப்பாக கோடை விடுமுறையான மே மாதத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை காண சுற்றுலா பயணிகள் குவிவார்கள். தற்போது புராதன சின்னங்கள் களைஇழந்து காணப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி மாமல்லபுரம் நகரம் தனது தனித்தன்மையை இழந்து காணப்படுகிறது.
வாழ்வாதாரம் இழப்பு
கோடையில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை கழிக்கும் கடற்கரை நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற னர். விடுதிகள், ஓட்டல்களுக்கு 2 மாதத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓட்டல், விடுதி நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அதேபோல் சிற்பக்கலைஞர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் அரசு தங்களுக்கு கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று அனைத்து சிற்பக்கலைஞர்களும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு புறம் கொரோனா அச்சம் காரணமான ஊரடங்கு, மறுபுறம் கடும் வெயிலின் தாக்கத்தினால் மாமல்லபுரத்தில் வாழும் உள்ளூர் மக்களும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் புராதன சின்னங்கள் அடங்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Related Tags :
Next Story