கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
x
தினத்தந்தி 4 May 2020 4:30 AM IST (Updated: 4 May 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

57 பேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 57 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் கும்பகோணம், திருவையாறு, திருவோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், அம்மாப்பேட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த மேலும் 3 பேர் நேற்று வீடு திரும்பினர். இவர்களில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 பேர், அய்யம்பேட்டையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

16 பேர் சிகிச்சை

தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்து வீடு திரும்பியுள்ள 3 நபர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) மருததுரை, முன்னாள் முதல்வர் குமுதா லிங்கராஜ் அவர்களும் மற்றும் மருத்துவக்கல்லூரி டாக்டர்களும் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

மேலும் குணமடைந்து வீடு செல்லும் 3 நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

655 பேருக்கு பரிசோதனை முடிவு

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 5 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 4 ஆயிரத்து 418 பேருக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 655 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

Next Story