கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தடை நீடிக்கும்: மராட்டியம் முழுவதும் இன்று முதல் கடைகள் திறப்பு - மதுக்கடைகளுக்கும் அனுமதி


கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தடை நீடிக்கும்: மராட்டியம் முழுவதும் இன்று முதல் கடைகள் திறப்பு - மதுக்கடைகளுக்கும் அனுமதி
x
தினத்தந்தி 4 May 2020 5:03 AM IST (Updated: 4 May 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்கப்படுகின்றன. மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

கொரோனா எனும் கொடிய வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மராட்டியத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரிந்து உள்ளது.

இந்தநிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் பலன் பெறும் வகையிலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டிய அரசும் தளர்வுகளை அறிவித்து உள்ளது.

கடைகள் திறப்பு

அதன்படி மாநிலம் முழுவதும் மும்பை, புனே உள்ளிட்ட சிவப்பு மண்டலப்பகுதிகளிலும் பல கட்டுப்பாடுகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் அத்தியாவசியம் இல்லாத கடைகளை திறக்கவும் மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. இதில் மதுக்கடைகளும் அடங்கும். இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட ‘கன்டெய்ன்மென்ட் சோன்’ எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் இதற்கு அனுமதி இல்லை.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஷண் கக்ரானி கூறியதாவது:-

‘சீல்’ வைக்கப்படாத பகுதிகளுக்கு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இல்லாத ஆடைகள், காலணிகள், மதுபானம், எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்படும். மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் அல்லது சந்தில் நாள் முழுக்க 5 கடைகள் மட்டுமே தற்போது திறக்க அனுமதி வழங்கப்படும்.

சமூக இடைவெளி

இதுவரை அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை திறந்து வைக்க நேர கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அந்த கடைகள் வழக்கம்போல செயல்படும்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தான் தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடைகள் திறந்து வைக்கும் நேரத்தை மாநகராட்சி கமிஷனர்கள் போன்ற அந்தந்த பகுதி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த கடைகள்

மாநில அரசின் உத்தரவின் படி சிவப்பு மண்டலங்களிலும் மதுக்கடைகள், சரக்கு சப்ளை, கட்டுமான பணிகள், தனியே அமைந்துள்ள கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கூரியர், அஞ்சல் சேவைகள், அவசரகால மருத்துவ தேவைக்கான பயணம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

எனவே தானே, நவிமும்பை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மும்பை பெருநகரம், புனே பெருநகரப்பகுதிகள் மற்றும் மாலேகாவ் போன்ற கொரோனா பாதிப்பு மிகுந்துள்ள சிவப்பு மண்டலங்களிலும் மேற்கண்ட கடைகள் திறக்கப்படுகிறது. ஆனால் அங்குள்ள கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இது பொருந்தாது. அங்கு தடை நீடிக்கும்.

இதுதவிர பச்சை, ஆரஞ்சு மண்டலப்பகுதிகளில் டாக்சி, வாடகை கார் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காரில் டிரைவர் உள்பட 3 பேர் செல்லலாம். மேலும் இங்கு அழகுநிலையங்கள், சலூன் கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என 3 வகையான மண்டலங்களிலும் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story