பல்லடத்தில் இருந்து குத்தாலத்துக்கு வந்த 12 பேர் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
பல்லடத்தில் இருந்து குத்தாலத்துக்கு வந்த 12 பேர் மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலையூர்,
பல்லடத்தில் இருந்து குத்தாலத்துக்கு வந்த 12 பேர் மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குத்தாலத்துக்கு வந்த 12 பேர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை தனியார் டெக்ஸ் டைல்ஸ் நிறுவனத்தில், நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த நிஷா, வேம்பு, தீபிகா, கவுசல்யா, நித்திஷ் ஆகிய 5 பேரும், திருவாரூர் பகுதியை சேர்ந்த சுதா, மயிலாடுதுறை ஒன்றியம் பாண்டூர் பகுதியை சேர்ந்த விமலா, குத்தாலம் ஒன்றியம் தொழுதாலங்குடி பகுதியை சேர்ந்த பிரியங்கா, பிரியா, பவித்ரா, கணேசமூர்த்தி, உமாநாத் ஆகிய 7 பேரும் ஆகமொத்தம் 12 பேரும் கடந்த 6 மாதங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பல்லடத்தில் இருந்து தனியார் வாகனத்தில் 12 பேரும் அரசு அனுமதியின்றி புறப்பட்டு நேற்று காலை 6 மணி அளவில் குத்தாலம் அருகே உள்ள தொழுதாலங்குடிக்கு வந்தனர். இதில் தொழுதாலங்குடி பகுதியை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் தொழுதாலங்குடியில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அங்கேயே தங்கினர்.
மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இதுபற்றி தகவல் அறிந்த தொழுதாலங்குடி கிராம நிர்வாக அலுவலர் சத்யபாமா, சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சுகாதாரத்துறை மாவட்ட திட்ட நலக்கல்வி அலுவலர் சுரேஷ்பாபு, சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 12 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
இதேபோல கோவை மாவட்டம் தொட்டியம்பாளையம் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக சென்ற சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில் அருகே பெருமங்கலம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் யுவராஜா (வயது 22) கோவையில் இருந்து சொந்த ஊரான வைத்தீஸ்வரன்கோவில் பெருமங்கலத்திற்கு நடந்து வரும்போது நாகை மாவட்டம் திருவாலங்காடு சோதனைச்சாவடியில் போலீசார் பிடித்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளிடம்
இதேபோல் கொள்ளிடம் சோதனை சாவடியில் சென்னையில் இருந்து சீர்காழி மார்க்கமாக சென்ற 8 கார்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஆக மொத்தம் 37 பேரை போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story