தேனி, பெரியகுளம், போடி உள்பட 6 நகரங்களுக்கு எந்த தளர்வும் கிடையாது கலெக்டர் அறிவிப்பு


தேனி, பெரியகுளம், போடி உள்பட 6 நகரங்களுக்கு எந்த தளர்வும் கிடையாது கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 5:17 AM IST (Updated: 4 May 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி, பெரியகுளம், போடி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் கிடையாது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் நடைமுறை படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிப்பது குறித்து கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர் கம்பம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லை. இந்த 6 நகர்பகுதிகளிலும் தற்போதைய நடைமுறையே தொடரும். அனுமதியளிக்கப்பட்ட எல்லா பணிகளையும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

கடைகள் திறக்கும் நேரம்

இன்று (திங்கட்கிழமை) முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் அரசு கட்டுமான பணிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அச்சகங்கள், கட்டுமானப்பொருட்கள் விற்பனையகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், செல்போன், கணினி, மின்சாதனப் பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

வீட்டு வேலை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு உதவியாளர்கள் மற்றும் சுய திறன் பணியாளர்களான பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சர் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளலாம்.

தொழிற்சாலைகள்

நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை பொறுத்தவரை பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் அல்லது பணியாளர்களை ஒரு முறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளலாம். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இதற்கு அனுமதி பெற தேவையில்லை.

தொழிற்சாலைகளை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளுக்கு அனுமதி இல்லை. பேரூராட்சி பகுதிகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் மட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று செயல்படலாம், ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெற தேவையில்லை. நூற்பு ஆலைகள் செயல்பட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இல்லை. ஊராட்சி பகுதிகளில் இயங்கலாம்.

பெருந்தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளுக்கும், பணிகளை தொடங்கவும், பணியாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான பணியாளர்களுக்கான வாகனங்களில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story