வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பஸ் கட்டணம் ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பஸ் கட்டணம் ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 5:55 AM IST (Updated: 4 May 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாவட்ட தொழிலாளர்கள் 2-வது நாளாக மெஜஸ்டிக் பஸ்நிலையத்திற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே எதிர்ப்பு கிளம்பியதால் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பஸ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் ஒட்டுமொத்தமாக கர்நாடகமும் முடக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், பிற வேலைகளுக்கு பெங்களூரு வந்தவர்கள் இங்கேயே சிக்கி கொண்டனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 40 நாட்களுக்கு பிறகு, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி பெங்களூருவில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை கர்நாடக அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளில் ஏராளமான தொழிலாளர்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் குவிந்தனர். அங்கு பயணிகளுக்கு 3 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில், ஒரு வழி பயண கட்டணம் குறைக்கப்பட்டது. ஆயினும், தொழிலாளர்களை இலவசமாக அழைத்து சென்று அவர்களின் ஊர்களில் விட வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது. முதல் நாளில் சுமார் 2,000 பேர் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்றும் சொந்த ஊர் திரும்புவதற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மெஜஸ்டிக்கிற்கு படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே தொழிலாளர்களின் பஸ் பயண செலவை காங்கிரசே ஏற்கும் என்றும், அதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் டி.கே.சிவக்குமார் நேற்று அறிவித்தார். இந்த தொகைக்கான காசோலையுடன் அவர் கே.எஸ்.ஆர்.டி.சி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால், அவர் திரும்பி சென்றார்.

ஒரு பஸ்சில் 30 பேர் அனுமதி

மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து காலை 10 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு பஸ்சில் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் இருக்கையில் ஒருவரும், 3 பேர் இருக்கையில் 2 பேரும் அமர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ஏராளமான தொழிலாளர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகள் மற்றும் குழந்தைகளுடன் மெஜஸ்டிக்கில் குவிந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் சமூக விலகல் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கு மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தாங்கள் 40 நாட்கள் நரக வேதனையை அனுபவித்துவிட்டதாகவும் வேதனையுடன் கூறினர். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்.

எடியூரப்பா அறிவிப்பு

மேலும் பஸ் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டன. தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காங்கிரஸ் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த பணத்தை அரசு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று (நேற்று) முதல் 3 நாட்கள் தொழிலாளர்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதனால் தொழிலாளர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, “தொழிலாளர்கள் பஸ்களுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த பஸ்களில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், இடையில் இறங்க அனுமதி இல்லை. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இறக்கி விடப்படுவார்கள். அங்கும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு தனிமை முகாம்களில் வைக்கப்படுவார்கள் என்றனர்.

Next Story