தக்கலை, குளச்சல் பகுதியில் இறைச்சி கடையில் திரண்ட அசைவ பிரியர்கள் தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் சென்றனர்


தக்கலை, குளச்சல் பகுதியில் இறைச்சி கடையில் திரண்ட அசைவ பிரியர்கள் தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் சென்றனர்
x
தினத்தந்தி 4 May 2020 6:44 AM IST (Updated: 4 May 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை, குளச்சல் பகுதியில் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் திரண்டனர். தட்டுப்பாடு ஏற்பட்டதால் இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பத்மநாபபுரம், 

தக்கலை, குளச்சல் பகுதியில் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் திரண்டனர். தட்டுப்பாடு ஏற்பட்டதால் இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அசைவ பிரியர்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே சமயத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட் கள் வாங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குமரியில் அசைவ பிரியர்கள் அதிகம். ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி கடைகளுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கிற்கு மத்தியிலும் அசைவ பிரியர்கள் தங்களுடைய ஆசையில் இருந்து விடுபடவில்லை.

அது தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் இறைச்சி கிடைப்பது தான் இல்லை.

இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றம்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தக்கலை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று இறைச்சியை வாங்கி சென்றனர். ஆனால் பல அசைவ பிரியர்கள், இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து ஆட்டு இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் இறைச்சி கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இறைச்சி விற்பனை நடைபெறும் கடைகளில் இறைச்சி உடனடியாக தீர்ந்து விடுகிறது. இதனால் பலருக்கு இறைச்சி கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

குளச்சல்

குளச்சல் நகராட்சி அம்பேத்கர் தினசரி சந்தையில் மீன், இறைச்சி மற்றும் காய்கறி, பழக்கடை, மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க காமராஜர் பஸ் நிலையத்துக்கு இறைச்சிக்கடைகள் மாற்றப்பட்டது. அங்கு நேற்று இறைச்சி வியாபாரம் நடந்தது.

இறைச்சி பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை போலீசார் ஒழுங்கு படுத்தினர்.

பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story