வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு


வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 4 May 2020 7:40 AM IST (Updated: 4 May 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை, 

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொந்த ஊரை விட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சென்னை மற்றும் பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக சுற்றுலா சென்றவர்கள், மாணவர்கள், தொழில் நிமித்தமாக தனியாக வெளிமாநிலங்களுக்கு சென்று இருப்பவர்கள் நெல்லை வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த விண்ணப்பங்கள் பட்டியலிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

சிகிச்சை அளிக்க ஏற்பாடு

அதன்பிறகு சிறப்பு ரெயில் அல்லது பஸ் மூலம் நெல்லை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திரும்பி வருபவர்கள் கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்த பிறகு தான் நெல்லை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பரிசோதனை செய்யும் போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொற்று நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, சில தனியார் மருத்துவமனை, சில தனியார் கல்லூரிகளில் படுகை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story