பாளையங்கோட்டையில் புதிய பெண் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை


பாளையங்கோட்டையில் புதிய பெண் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 4 May 2020 7:55 AM IST (Updated: 4 May 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பெண் போலீசாருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் பெண் போலீசாருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

காவலர் தேர்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் சீருடை தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர் தேர்வு நடந்தது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகளும் நடந்தன. இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 173 பேர் தேர்வு பெற்றனர்.

தேர்வு பெற்ற பெண்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு இன்று (அதாவது நேற்று) ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா அறிவித்தார். அதன்படி ஆயுதப்படை மைதானத்தில் காலை 6 மணி முதல் புதிய பெண் போலீசார் வரத்தொடங்கினர். காலை 8 மணிக்கு தேர்வு தொடங்கியது. அவர்கள் முக கவசம் அணிந்து வரிசையாக நின்றனர்.

கொரோனா பரிசோதனை

முதல் கட்டமாக அனைத்து பெண் போலீசாருக்கு கொரோனா உள்பட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. அசல் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகள் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து அவர்களின் ரேகை பதிவு செய்யப்பட்டது. புதிய பெண் போலீசாருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பை, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட காவல்துறை அலுவலக (அமெச்சுப்பணி) கண்காணிப்பாளர்கள் முத்துராஜ், அருள்ராஜ், ஆயுதப்படை துணை முதல்வர் ராஜ்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடிப்படை பயிற்சி

புதிய பெண் போலீசாருக்கு சில நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் ஒரு போலீஸ் நிலையத்துக்கு 4 பேர் என பிரித்து அனுப்பப்படுகிறார்கள். அவர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணிக்காக செல்கிறார்கள்.

கொரோனாவையொட்டி ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிந்தவுடன் அவர்களுக்கு முறைப்படி 6 மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு எந்த போலீஸ் நிலையத்தில் பணி என்பது தெரிவிக்கப்படும்.

Next Story