கரூர் மாவட்டத்தில் மே மாத ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வினியோகம்


கரூர் மாவட்டத்தில் மே மாத ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 4 May 2020 5:14 AM GMT (Updated: 4 May 2020 5:14 AM GMT)

கரூர் மாவட்டத்தில், மே மாத ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், மே மாத ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

டோக்கன் வழங்கும் பணி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில், ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் இந்த மாதம் (மே) அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் விலையின்றி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 586 ரேஷன் கடைகளிலும், விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

அதன்படி நாள் ஒன்றுக்கு 150 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எந்த நாளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என குறிப்பிட்டு, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2 நாட்களாக வீடு தோறும் சென்று, ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

மதியம் வரை செயல்படும்

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இயங்கும் கடைகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், இதர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரத்தில் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தயார் நிலை

இதுகுறித்து ரேஷன்கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கியதாகவும், இரண்டு நாட்களில் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருட்கள் கிடைக்கும் வகையில், தயார் நிலையில் உள்ளதாகவும், பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைபிடித்து பொருட்களை வாங்குவதை கண்காணிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story