“தினத்தந்தி” செய்தி எதிரொலி: தேளூரில் உணவின்றி தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி


“தினத்தந்தி” செய்தி எதிரொலி: தேளூரில் உணவின்றி தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி
x
தினத்தந்தி 4 May 2020 11:56 AM IST (Updated: 4 May 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக தேளூரில் உணவின்றி தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டது.

வி.கைகாட்டி, 

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக தேளூரில் உணவின்றி தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டது.

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்

தேளூர் கிராமம் அருகே உள்ள வயல்வெளிகளில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவினால் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உணவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு “தினத்தந்தி” நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனை அறிந்த அரியலூர் மாவட்ட காவல் துறை மற்றும் நிர்வாக துறை இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கி அவர்களின் நலனில் கவனம் செலுத்தினர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று முன்தினம் நேரில் சென்று வெளி மாநிலத்தவர்களின் நலனை விசாரித்து அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அவர்களுக்கு முக கவசங்களை வழங்கி, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அரசு பள்ளி வளாகத்தில்...

144 தடை உத்தரவு முடியும் வரை அரசின் உத்தரவை மதித்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் உங்களை (அதாவது அவர்களை) சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றார். தொடர்ந்து அரசின் உத்தரவை மதித்து அரசுக்கும், போலீசாருக்கும் ஒத்துழைப்பு அளிப்போம் என்று அனைவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உறுதி அளித்தனர்.

மேலும் அவர்கள் அனைவரையும் லாரி மூலம் கீழப்பழூர் அரசு பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். வடமாநில தொழிலாளர்கள் குறித்து செய்தி வெளியிட்ட “தினத்தந்தி” நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உடன் இருந்தார்.

Next Story