கல்லாத்தூர் அருகே விளையாடிய போது ஹெலி கேமராவை பார்த்து தெறித்து ஓடிய இளைஞர்கள்


கல்லாத்தூர் அருகே விளையாடிய போது ஹெலி கேமராவை பார்த்து தெறித்து ஓடிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 4 May 2020 12:15 PM IST (Updated: 4 May 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

கல்லாத்தூர் அருகே விளையாடிய போது ஹெலி கேமராவை பார்த்து இளைஞர்கள் தெறித்து ஓடினர்.

ஜெயங்கொண்டம், 

கல்லாத்தூர் அருகே விளையாடிய போது ஹெலி கேமராவை பார்த்து இளைஞர்கள் தெறித்து ஓடினர்.

ஹெலி கேமரா மூலம் கண்காணிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களாக ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ஹெலி கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

தெறித்து ஓடினர்

இந்த ஹெலி கேமராவை கண்டு தெறித்து ஓடிய இளைஞர்களின் வீடியோவினை ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று வெளியிட்டனர். இதில் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் அருகே உள்ள மைதானத்தில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெலி கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடினர். இதில் பந்தை எடுத்துச்செல்லும் ஒருவரது லுங்கி அவிழ்ந்துவிட லுங்கியை கட்டிக்கொண்டு மீண்டும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். மேலும் கேமராவை கண்டு புதருக்குள் ஒழிந்த இளைஞர்கள் கேமரா அருகில் வருவதை கண்டதும் மீண்டும் ஓட்டம் பிடித்தனர். இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு பள்ளி மைதானத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கேமராவை கண்டதும் சுவர் ஏறிக்குதித்து ஓட்டம் பிடித்தனர். இந்தநிலையில் நேரில் சென்ற ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, வசந்த் ஆகியோர் இளைஞர்களுக்கு அறிவுரைகூறி அனுப்பிவைத்தனர்.

Next Story