சமூக இடைவெளியின்றி வீட்டில் நடந்த வளைகாப்பு: கர்ப்பிணி உள்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


சமூக இடைவெளியின்றி வீட்டில் நடந்த வளைகாப்பு: கர்ப்பிணி உள்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 5 May 2020 4:30 AM IST (Updated: 5 May 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியின்றி நடைபெற்ற வளைகாப்பு வீட்டில் இருந்த கர்ப்பிணி உள்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி கிராமத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள அவருடைய உறவினர் ஒருவர் வீட்டில் வளைகாப்பு நடத்தி உள்ளனர். அதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து உறவினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி மீறப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் மலர்விழி, சுகாதார துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பாலவாடியில் வளைகாப்பு நடந்த வீடு உள்ள பகுதிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து கர்ப்பிணி, அவருடைய கணவர், வளைகாப்பு நடைபெற்ற வீட்டை சேர்ந்தவர்கள் என 7 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வளைகாப்பு நடத்தப்பட்ட வீட்டின் முன்பு வெளியாட்கள் செல்லாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 60 பேரை கண்டறிந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இந்த பணியில் நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன், பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சவீதா, இண்டூர் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நவீன்குமார் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள கானாப்பட்டியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நேற்று வீட்டில் நடத்தப்பட்ட ஒரு வளைகாப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முனியப்பன்(வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story