தென்காசியில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் மதியம் அடைக்கப்பட்டதால் பரபரப்பு
ஊரடங்கு தளர்வால் தென்காசியில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் மதியத்துக்கு மேல் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாயினர். நேற்று முதல் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் சில தளர்வுகளும் மத்திய அரசால் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தென்காசியில் நேற்று காலையிலேயே சிறிய கடைகள் திறக்கப்பட்டன. சிறிய ஓட்டல்களும் திறக்கப்பட்டு பார்சல்கள் வழங்கப்பட்டன. பெரிய கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சுவாமி சன்னதி பஜாரில் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.
எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு சென்றனர். கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் புளியங்குடியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவலை அறிந்ததும் தென்காசி மாவட்ட மக்கள் மீண்டும் சோகத்திற்கு உள்ளாகினர். மாலை வரை கடைகள் திறக்கலாம் என்ற தளர்வு இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் மதியம் 1 மணிக்கு போலீசார் அனைத்து கடைகளையும் அடைக்குமாறு கூறினார் கள்.
தென்காசி மாவட்டம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் மதியம் முதல் வந்தது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. ஒன்றிரண்டு ஓட்டல்கள் மட்டும் இயங்கின. அங்கு குறைவான பொதுமக்கள் பார்சல் வாங்கிச் சென்றனர். காலையில் திறக்கப்பட்ட கடைகள் மதியம் அடைக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காட்டில் நேற்று காலை முதல் ஓட்டல்கள், ஹார்டுவேர்ஸ், மளிகை, எலக்ட்ரிக்கல்ஸ், பழக்கடைகள் உள்ளிட்ட 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. இதனால் களக்காடு கோட்டை, பழைய பஸ்நிலையம், கோவில்பத்து சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதால் தடை செய்யப்பட்ட வியாசராஜபுரம் பகுதி திறக்கப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள கடைகள் திறந்து இருந்தன. மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
Related Tags :
Next Story