தென்காசி மாவட்டத்தில் எந்தெந்த கடைகளை திறக்க அனுமதி? - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விளக்கம்
கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு இருப்பதால், எந்தெந்த கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்காசி,
ஊரடங்கு காலத்தில் தென்காசி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் பிற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி இல்லை.
குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்கும் பெரிய நகை மற்றும் ஜவுளி நிறுவனங்கள், அனைத்து சலூன் கடைகள், அழகு நிலையங்கள், அனைத்து மால்கள், வணிக வளாகங்களில் இயங்கும் நிறுவனங்கள், கடைகள், அனைத்து டீக்கடைகள், பொது நுழைவு வாயிலுடன் செயல்பட்டு வரும் குழு கடைகள்.
கீழ்க்கண்ட கடைகள் சில கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
பிளாசிங் சென்டர்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டும், 50 சதவீத கணினி கொண்டும் நடத்தலாம். அனைத்து தனி கடைகள், இரும்பு கடைகள், கட்டுமான பொருட்கள் கடைகள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மொபைல் போன், கணினி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார்கள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தொழில் நிறுவனங்களும், கடைகளும், அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றி, போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும், அரசால் வெளியிடப்பட்டு உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கிருமி நாசினி
ஒரு நாளைக்கு 3 முறை கிருமி நாசினி பயன்படுத்தி கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்து இருக்க வேண்டும். கடையில் வேலை செய்பவர்களின் பட்டியல்களை நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்து சுய சான்று அளிக்க வேண்டும். அதை கடைகளின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் கடைக்கு வருபவர்களின் பதிவேடுகளை கடைக்காரர்கள் தயார் செய்து, அதை பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நாகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும்போது, அனுமதி அட்டையை கொண்டு வர வேண்டும். கொரோனா நோய் தெற்றை தடுக்க சமூக இடைவெளியை அமல்படுத்துவதில் குறைகள் இருப்பின் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும், அவசர கட்டுப்பாட்டு அறையை 04633 290548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story