நாமக்கல் மாவட்டத்தில் 185 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 5 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் 185 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2020 4:15 AM IST (Updated: 5 May 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 185 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சாராய ஊறல், விற்பனை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

பரமத்திவேலூர் தாலுகா எஸ்.கே. மேட்டூர் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்திருப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள புதர் மறைவில் 100 லிட்டர் சாராய ஊறல் இருந்தது தெரிய வந்தது.

உடனே சாராய ஊறல்களை பரமத்திவேலூர் போலீசார் அழித்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எஸ்.கே.மேட்டூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (60) மற்றும் நாகராஜ் (37) ஆகிய இருவரும் சாராயம் காய்ச்சி விற்க முயன்றது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மகன் நவீன்குமார் (22). இவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) ராமு தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேசிங்கன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது 2 லிட்டர் சாராயம், 20 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள நாமக்கல் மதுவிலக்கு போலீசார் நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு, நல்லூர்

இதேபோல் திருச்செங்கோடு புறநகர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், தோக்கவாடி தச்சன்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த பழனியப்பன்(62), திருச்செங்கோடு அருகே மோளியப்பள்ளியை சேர்ந்த மனோஜ்குமார் (33) ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் இருந்து 4 லிட்டர் சாராயம் மற்றும் 15 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர திடுமல் ஆவாரங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்றதாக துரைசாமி (55), சுரேஷ் (35), ஆறுமுகம் (60) ஆகியோரை நல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராய ஊறல், 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 185 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டதுடன், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story