சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த பெண் உள்பட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த பெண் உள்பட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 4 May 2020 11:00 PM GMT (Updated: 4 May 2020 8:23 PM GMT)

சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த பெண் உள்பட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நாமகிரிப்பேட்டை, 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே திம்மநாயக்கன்பட்டியில் உள்ள சோதனைச்சாவடியில், மங்களபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 2 சரக்கு லாரிகளில் வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் ஒரு லாரியில் வந்த 11 பேரையும், மற்றொரு லாரியில் வந்த 7 பேரையும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் அனைவரும் திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், பரமத்திவேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், சென்னை ராயபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த அவர்கள் ஊரடங்கால் வேலை இழந்து ஊருக்கு லாரிகளில் திரும்பியதும் தெரியவந்தது. இதனிடையே சென்னையில் இருந்து மோகனூருக்கு காரில் வந்த பெண் உள்பட 4 பேரை தெர்மல் ஸ்கேனர் மூலம் போலீசார் பரிசோதித்தனர். அப்போது அந்த பெண், கார் டிரைவர் உள்பட 4 பேருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்களும் திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். கூலித்தொழிலாளர்கள் உள்பட 22 பேரின் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story