ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வினியோகம்


ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வினியோகம்
x
தினத்தந்தி 5 May 2020 3:31 AM IST (Updated: 5 May 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பொருட்களை வினியோகம் செய்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கடந்த ஏப்ரல் மாதம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டது.

அதுபோல் இம்மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கும் பணி தொடங்கியது.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களுக்குட்பட்ட 1,254 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 72 ஆயிரத்து 943 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களுக்குட்பட்ட 766 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 909 பேருக்கும் ஆக மொத்தம் 9 லட்சத்து 71 ஆயிரத்து 852 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணி தொடங்கியது. இந்த அத்தியாவசிய பொருட்களை பெற வரும் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் விவரங்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வருவாய்த்துறையினர், ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று எந்தெந்த நாளில், எந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட் கள் வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய டோக்கனை வழங்கினர். அந்த டோக்கன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக 1 மீட்டர் இடைவெளி விட்டு அடையாள குறியீடு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி ஒருவரோடு ஒருவராக நெருங்கி நிற்காமல் அடையாள கட்டத்திற்குள் நின்றபடி சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட் களை வாங்கிச்சென்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இவர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் முக கவசமும், கையுறையும் அணிந்தபடி அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச்செல்கின்றனரா? என்றும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்...

இதேபோல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச்செல்வதை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் சரக்கு வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை நேரில் சென்று அதிகாரிகள் வழங்கினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விடுதலின்றி அனைவருக்கும் வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை, மக்கள் கூட்டம், கூட்டமாக வராமல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிச்செல்லலாம். என்றனர்.

Next Story