போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண் உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி


போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண் உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 5 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண் உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பூந்தமல்லி, 

திருவேற்காடு, ஈஸ்வரன் நகரைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர், கோயம்பேட்டில் காய்கறி கடை வைத்து உள்ளார். இவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது வீட்டில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். ஊரடங்கு உத்தரவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களை வாங்கி அங்கேயே சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண்

அதேபோல் திருமுல்லைவாயல் குளக்கரை தெருவைச் சேர்ந்த 26 வயதான காவலர் பயிற்சிக்கு தேர்வான பெண் போலீசுக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தவிர அயப்பாக்கம் பகுதியில் ஒருவருக்கும், மீஞ்சூரில் 2 பேருக்கும், கும்மிடிப்பூண்டியில் ஒருவர், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டையில் ஒருவர் உள்பட நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது பெண், போலீஸ் பயிற்சிக்காக மாங்காட்டில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். சென்னை மவுண்டில் நடைபெற்ற போலீஸ் பயிற்சிக்கு சென்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Next Story