ஆந்திராவில் மதுக்கடைகள் திறப்பு: தமிழக எல்லையில் உள்ள கடைகளுக்கு குடிமகன்கள் படையெடுப்பு - மதுபாட்டில்கள் வேகமாக விற்று தீர்ந்தன


ஆந்திராவில் மதுக்கடைகள் திறப்பு: தமிழக எல்லையில் உள்ள கடைகளுக்கு குடிமகன்கள் படையெடுப்பு - மதுபாட்டில்கள் வேகமாக விற்று தீர்ந்தன
x
தினத்தந்தி 4 May 2020 10:45 PM GMT (Updated: 4 May 2020 10:08 PM GMT)

கொரோனா வைரஸ் ஊரடங்கில் தளர்வு காரணமாக ஆந்திராவில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. தமிழக எல்லையில் உள்ள மதுக்கடைக்கு திரண்டு வந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

ஊத்துக்கோட்டை, 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதிலும் குறிப்பாக வணிகவளாகங்கள், திரையரங்குகள் மற்றும் அனைத்து மாநிலங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மதுகுடிக்க முடியாமல் குடிமகன்கள் நீண்ட நாட்களாக தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக சிலர் கள்ள சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். போலீசாரும் அதிரடி சோதனைகள் நடத்தி சாராயம் காய்ச்சி விற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

திரண்ட குடிமகன்கள்

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு தளர்த்தியது. அதன்பயனாக 44 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து, மது பிரியர்கள் உற்சாகம் அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதற்கிடையே ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சத்தியவேடு ரோட்டில் ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட தாசுகுப்பம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள 2 மதுக்கடைகள் நேற்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டன. ஆனால் காலை 6 மணிக்கெல்லாம் குடிமகன்கள் கடைகள் முன்பு திரண்டனர். அவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நின்றனர்.

மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தன

கடைக்கு முன் திரண்ட குடிமகன்களில், ஆந்திராவை சேர்ந்தவர்களை காட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில், சில மதுபிரியர்கள் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி சாக்குப்பைகளில் வைத்து கொண்டு தோளில் சுமந்து சென்றதையும் காணமுடிந்தது. நேற்று அங்கு 100-க்கும் மேற்பட்ட குடிமகன்கள் திரண்டதால் அப்பகுதி திருவிழா கூட்டம்போல் காட்சியளித்தது. 2 கடைகளிலும் உள்ள மதுபான பாட்டில்களும் வேகமாக விற்று தீர்ந்து விட்டன.

மேலும், அதற்கு முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து குடிமகன்கள் படையடுத்ததால் மதியம் 2 மணிக்கு ஊத்துக்கோட்டையில் தாசுகுப்பம் சாலையை போலீசார் மூடி விட்டனர்.

Next Story