சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை


சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 5 May 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பூர், 

தமிழ்நாடு மருத்துவர் சவரத்தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி.நகர் அன்னை இந்திரா நகரில் உள்ள அச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காலத்தில் எங்களது தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தற்போது சிறு, குறு தொழில்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சவரத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, கடை வாடகை, மின் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கட்ட வழியில்லாமலும், உண்ண உணவு இன்றி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்கள். 

எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு எந்த மாதிரியான சட்டதிட்டங்களை கொடுத்தாலும் அதை நாங்கள் கடைபிடிக்க தயாராக உள்ளோம். எங்களது கடைக்கு வரும் அனைவரையும் நாங்கள் சமூக இடைவெளியில் வழிநடத்தி ஒவ்வொரு நபருக்கும் முடிதிருத்தம் செய்த பின்னர் அந்த பொருட்களை உரிய கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி அதன் பிறகே மற்றவருக்கு பயன்படுத்துவோம் எனவும் உறுதி அளிக்கிறோம்.

எங்களது சங்கத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளார்கள். ஆனால் எங்களது தொழிலில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே. ஆனால் இதை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். எனவே எங்களது தொழிலாளர்கள் அனைவரையும் கணக்கீடு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில பொருளாளர் சங்கர், இணை பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாக குழு தலைவர் பூபதி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story